இந்தியா-இந்தியர்களை பாதுகாக்க விண்வெளியிலும் கூட வலிமையை நிரூபிக்க தயங்க மாட்டோம் - பிரதமர் மோடி


இந்தியா-இந்தியர்களை பாதுகாக்க  விண்வெளியிலும் கூட வலிமையை நிரூபிக்க தயங்க மாட்டோம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 10 May 2019 11:17 AM GMT (Updated: 10 May 2019 11:17 AM GMT)

இந்தியா- இந்தியர்களை பாதுகாக்க மண்ணிலும், விண்ணிலும் மட்டுமல்ல விண்வெளியிலும் கூட வலிமையை நிரூபிக்க தயங்க மாட்டோம் என பிரதமர் மோடி கூறினார். #PMModi

புதுடெல்லி,

மக்களவை தேர்தலுக்கான 6 வது கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ளும்  மாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதில் அவர் அரியானா மாநிலம் ரோத்தக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

கூட்டத்திற்கு பின்னர் அவர், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும். புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் எடுக்கப்பட்டதை போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் இந்தியா- இந்தியர்களை பாதுகாக்க மண்ணிலும், விண்ணிலும் மட்டுமல்ல விண்வெளியிலும் கூட வலிமையை நிரூபிக்க தயங்க மாட்டோம்.

மசூத் அசாரை போலவே தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இதர பயங்கரவாதிகளையும் சர்வதேச பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்விக்கு, 

பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்  

மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் கருத்தை மோடி திட்டவட்டமாக மறுத்தார். பாரதீய ஜனதா கட்சி கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற அவர், கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெல்லும் என்றார். 

சாதனைகளை சொல்லாமல், எதிர்க்கட்சிகளை சாடி பிரசாரம் செய்வதாக கூறப்படும் புகாரை மறுத்த மோடி, பிரசாரத்தின் முதல் நாளில் இருந்து இப்போது வரை அரசின் சாதனைகளை தாம் பட்டியலிடுவதாக கூறினார். ஒன்றரை கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியது, ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டமென பல்வேறு திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

Next Story