கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்


கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 May 2019 10:32 AM GMT (Updated: 17 May 2019 5:19 PM GMT)

கோட்சே குறித்து ஆதரித்து கருத்து கூறிய் 3 தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் தான் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கமல் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து கேட்ட கேள்விக்கு போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் நாதுராம்கோட்சே தீவிரவாதி இல்லை என்றும் அவர் சிறந்த தேசபக்திமான் என்றும் கூறினார்.  இதற்கு பாரதீயஜனதா கண்டனம் தெரிவித்தது. இதனால் பிரச்சினை எழவே அவர் நேற்று மாலை பகிரங்க மன்னிப்பு கோரினார்.

காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்று பேசிய போபால் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வியை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே கமல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி நலின் குமார் கட்டீல், கோட்சே ஒருவரைத்தான் கொலை செய்தார், மும்பை தீவிரவாதி கசாப் 72 பேரை கொன்றான். ராஜீவ காந்தி 17000 பேரை கொலை செய்தார். இதில் யார் மோசமானவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என மற்றொரு பிரச்சினையை  கிளப்பினார்.

இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே, "70 ஆண்டுகள் கழித்து இன்றைய தலைமுறையினர் மாறுபட்ட சூழலை விவாதிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிக்கப்பட்ட விஷயத்தை கேட்பதற்கான ஒரு நல்ல எதிர்காலம் பிறந்துள்ளது. இந்த விவாதத்தை பார்த்து இருந்தால் கோட்சே மகிழ்ச்சி அடைந்து இருப்பார்" என்றார்.

இதனிடையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கோட்சேவை பாராட்டி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாஜவின் முக்கிய நிர்வாகிகள் பிரக்யா சிங், நலின் குமார், அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 3 பேரும் இது தொடர்பாக 10 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Next Story