இந்து கடவுளை அவமதிக்கும் விதமான பொருட்கள் விற்பனை அமேசானுக்கு கடும் எதிர்ப்பு
இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலான பொருட்கள் அமேசான் நிறுவனத்தின் இணைய விற்பனையில் இடம் பெற்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் தன்னுடைய இணையதளத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பு செய்யும் வகையிலான பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இந்து கடவுள்கள் சிவன், விநாயகர்களின் புகைப்படம் டாய்லெட் கவரிலும், காலில் போட்டு மிதிக்கும் மேட்களிலும் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று மகாத்மா காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகையான பொருட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இணையதளத்தின் அமெரிக்க பிரிவில் இதுபோன்ற பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து டுவிட்டரில் அமேசான் இணையதளத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்தியர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய வேதனை, கோபத்தை பதிவு செய்வதுடன் அமேசானை புறக்கணிப்போம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பலர் தங்களுடைய மொபைலில் இருந்து அமேசான் அப் செயலியை நீக்கிவிட்டதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் அமேசான் இணையதளத்தில் நடந்தது. அப்போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். அமேசான் ஊழியர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கையை விடுத்தார். இதனையடுத்து இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலான பொருட்கள் அமேசானிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இப்போது அமேசானிடம் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story