கன்னித்தன்மை சோதனைக்கு மறுத்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை - 4 பேர் மீது வழக்குப்பதிவு


கன்னித்தன்மை சோதனைக்கு மறுத்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை - 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 9:07 PM GMT)

கன்னித்தன்மை சோதனைக்கு மறுத்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடுமை தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தானே,

மராட்டியத்தில் கன்ஞர்பாத் சமூக மக்களிடம் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை செய்யும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கத்துக்கு எதிராக இளைஞர்கள் சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில் தானேயை சேர்ந்த இளைஞர் விவேக் என்பவரும் ஒருவர்.

இந்த நிலையில் விவேக், ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விவேக்கின் ஆதரவு இருந்ததால் ஐஸ்வர்யா கன்னித்தன்மை சோதனை செய்யவில்லை.

இதற்கு அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கட்டப்பஞ்சாயத்தில் அவர்களது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் விவேக்கின் பாட்டி உயிரிழந்தார். ஆனால் அந்த துக்க நிகழ்ச்சியில் கன்ஞர்பாத் சமூகத்தினர் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் அந்த பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சத்தமாக பாடல் வைத்து நடனமாடினர்.

இதனால் வேதனை அடைந்த விவேக் மற்றும் அவரது குடும்பத்தினர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அம்பர்நாத் போலீசார் கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை சோதனை செய்வது பெண்களிடம் பாலியல் தொல்லை செய்வதற்கான குற்றம் என்று சமீபத்தில் மராட்டிய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story