2 நாள் பயணமாக கேதார்நாத், பத்ரிநாத், கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்


2 நாள் பயணமாக கேதார்நாத், பத்ரிநாத், கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 18 May 2019 9:39 AM IST (Updated: 18 May 2019 9:58 AM IST)
t-max-icont-min-icon

7-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிந்த நிலையில் பிரதமர் மோடி இன்றும், நாளையும் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்,பத்ரிநாத் கோயிலுக்கு செல்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி தேர்தல் பிரசாரத்தை மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் நகரில் மேற்கொண்டார்.

பிரசாரம் முடிந்ததும் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் நேற்று மாலை பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேட்டி அளிக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அதில், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் பங்கேற்ற முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு இதுவே ஆகும்.

இந்நிலையில் பிரசாரம் முடிந்த கையுடன் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) 18-ம் தேதி கேதார்நாத் கோயிலுக்கு செல்கிறார். நாளை 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் கோயிலுக்கும் செல்கிறார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்.  தியான குகைக்கும் செல்கிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சி பணிகள் குறித்தும் யோசனைகள் தெரிவிக்கவுள்ளார். கேதார்புரி மறு சீரமைப்பு திட்டத்தை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி கேதர்நாத்துக்கு இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் இங்கு முதன் முதலாக சென்றார். 2017 அக்டோபர், 2018 நவம்பர் மாதமும் இங்கு சென்றுள்ளார். தற்போது 4 வது முறை ஆகும். கேதார்நாத் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story