பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து: உத்தரபிரதேச மந்திரி அதிரடி நீக்கம்


பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து: உத்தரபிரதேச மந்திரி அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 20 May 2019 6:30 PM GMT (Updated: 20 May 2019 5:30 PM GMT)

பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மந்திரி நீக்கம் செய்யப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் யோகிஆதித்யாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு எதிராக அடிக்கடி கருத்துகள் தெரிவித்து வந்தார். பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோதிலும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் பல தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தி இருந்த ராஜ்பார், அங்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

மேலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கிடையே சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர் ‘பா.ஜனதா உறுப்பினர்களை ‘ஷு’வால் அடிக்க வேண்டும்’ எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராஜ்பாரை மந்திரி பதவியில் இருந்து நீக்கும்படி மாநில கவர்னர் ராம் நாயக்குக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர் ராம் நாயக், ஓம் பிரகாஷ் ராஜ்பாரை மந்திரி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.


Next Story