பெண் விமானிக்கு பாலியல் தொல்லை; ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குள் நுழைய விமானிக்கு அனுமதி மறுப்பு


பெண் விமானிக்கு பாலியல் தொல்லை; ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குள் நுழைய விமானிக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 21 May 2019 1:42 PM GMT (Updated: 21 May 2019 1:42 PM GMT)

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குள் நுழைய பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விமானி எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் விமானி ஒருவர் மூத்த விமானி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.  ஐதராபாத்தில் கடந்த மே 5ந்தேதி பெண் விமானிக்கு மூத்த விமானி பயிற்சி அளித்தபொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றி அந்த பெண் அளித்துள்ள புகாரில், பயிற்சி வகுப்பு முடிந்த பின் 
அன்றிரவு சாப்பிட உணவு விடுதிக்கு செல்வோம் என பெண்ணிடம் மூத்த விமானி கூறியுள்ளார்.  இதற்கு அவர் சம்மதித்து உள்ளார்.  இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் உணவு விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.  அங்கு பெண்ணிடம், தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற நிலை ஆகியவற்றை பற்றி அவர் கூறியுள்ளார்.

இதன்பின், தொலைதூரத்தில் உனது கணவர் இருக்கும்பொழுது உங்களது தாம்பத்ய வாழ்வு எப்படி இருக்கிறது என்பதில் தொடங்கி, தகாத கேள்விகள் பலவற்றை அவர் கேட்டுள்ளார்.  ஒரு சமயத்தில், இவை பற்றி பேச விரும்பவில்லை என கூறி விட்டு அங்கிருந்து அந்த பெண் விமானி சென்றுள்ளார்.  அவர் கார் ஒன்றிற்கு அழைப்பு விடுத்து விட்டு அதற்காக காத்திருந்துள்ளார்.

ஆனால் காருக்காக அரை மணிநேரம் காத்திருந்த அந்த பெண்ணிடம் மூத்த விமானி தகாத முறையில் நடந்துள்ளார்.  அவரது இந்த செயலால் பெண் விமானி அச்சம் மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வருங்காலத்தில் வேறு யாருக்கும் இதுபோன்ற தொல்லை ஏற்பட கூடாது என்பதற்காகவே இதுபற்றிய புகாரை தெரிவித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த புகார் பற்றி கடந்த புதன்கிழமை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில், இந்த விசாரணை முடியும்வரை குற்றச்சாட்டு கூறப்பட்ட மூத்த விமானி, ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்திற்குள் நுழைய எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

அந்நிறுவனத்தின் மண்டல இயக்குநர் அபய் பதக் விமானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், விசாரணை நடந்து வருகிறது.  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தில், நிறுவன வளாகத்திற்குள் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் நுழைய கூடாது என தெரிவித்துள்ளார்.

Next Story