மம்தா பானர்ஜியின் ‘கிங் மேக்கர்’ கனவு தகர்ந்தது
மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் ‘கிங் மேக்கர்’ கனவு தகர்ந்தது.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்று மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி கனவு கண்டார்.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளிலும் தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், தேர்தலுக்கு பிறகு யார் பிரதமர் என்பதை தங்களது கட்சிதான் தீர்மானிக்கும் என்றும் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் பேசி வந்தார்.
எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நினைப்பில் அவர் இப்படி பேசி வந்தார். அதனால்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவிக்க அவர் முன்வரவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தான் ‘கிங் மேக்கர்’ ஆகி, பிரதமரை தீர்மானிக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார்.
ஆனால், அவரது கனவை தகர்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
பா.ஜனதா தனி பெரும்பான்மை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. எனவே, எந்த சிக்கலும் இல்லாமல் மோடி மீண்டும் பிரதமர் ஆகப் போகிறார்.
மேலும், மேற்கு வங்காளத்தில் மொத்த தொகுதிகளையும் அள்ளி விடலாம் என்ற அவரது எண்ணமும் பொய்த்துப் போனது. 22 தொகுதிகளை மட்டுமே அவரது கட்சி கைப்பற்றும் நிலையில் உள்ளது.
இதனால், தேர்தல் முடிவுகள் பற்றி ஒரு ‘டுவிட்டர்’ பதிவு மட்டும் வெளியிட்டு விட்டு, மம்தா பானர்ஜி அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக எந்த ஆலோசனையிலும் அவர் ஈடுபடவில்லை.