கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். வவ்வாலின் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இப்போதும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.கே. குட்டப்பன் கூறியுள்ளார்.
“இளைஞரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் யாரும் பீதியடைய தேவையில்லை. திங்கள் கிழமையன்று முடிவு தெரிவிக்கப்படும். நிபா வைரஸ் பாதிப்பு என்பது உறுதி செய்யப்படவில்லை. தொடக்கக்கட்ட அறிகுறிகள் நிபா வைரஸ் பாதிப்பு போன்று தெரிகிறது என கூறப்பட்டுள்ளது. அண்டைய மாவட்டத்திற்கு பயிற்சி வகுப்புக்காக இளைஞர் சென்று இருந்ததாகவும், அதன்பின்னர் காய்ச்சல் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்,” என கூறியுள்ளார் குட்டப்பன். ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லையென ஆய்வில் தெரியவந்தது. எனவே கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கடுமையான காய்ச்சல், தசைமூட்டுவலி, தலைவலி, கண் எரிச்சல், தொண்டைவலி, தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு வலிப்பு, மூளை காய்ச்சல் போன்றவை நிபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். எனவே எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் முறையான சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவைதான் இதன் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
Related Tags :
Next Story