நிபா வைரஸ் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் - பினராயி விஜயன்
கேரளாவில் நிபா வைரஸ் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே மற்றும் ஆலப்புழாவுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் உள்ள பரிசோதனை மையம் நிபா வைரஸ் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார். புனே பரிசோதனை மையத்தின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே மாநிலத்தில் கண்காணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் அந்த இளைஞர் படித்து வருகிறார். அங்கிருந்து திருச்சூரில் உள்ள நிறுவனத்திற்கு இன்டர்ஷிப் சென்றுள்ளார். அவருடன் 22 மாணவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய போதுதான் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நிபா வைரஸ் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மாநிலத்தில் தற்போதைய நிலையை அரசு உன்னிப்பாக கவனிக்கிறது. சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்றுங்கள். யாரும் பயப்படதேவையில்லை. எச்சரிக்கையாக இருங்கள். எந்தஒரு நிலையையும் எதிர்க்கொள்ளும் திறனுடன் நம்முடைய சுகாதாரத்துறை உள்ளது என பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story