மாயமான இந்திய விமானப்படை ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணி தீவிரம்
அசாமில் இருந்து 13 பேருடன் அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் சீன எல்லையில் திடீரென மாயமானது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலம் ஜோர்காட் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நண்பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் ஒன்று அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. விமானப்படையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானத்தில் விமானப்படை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் அமைந்துள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மேலும் ராணுவம் மற்றும் இந்தோ–திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே அவ்வப்போது மழை பெய்வதால் தேடும் பணியில் தொய்வு நேரிடுகிறது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டதாகும். விமானப்படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்தது. விபத்தில் சிக்கியுள்ள இந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி குறித்து தெரியவில்லை. இதனால் விமானப்படையினர் மத்தியில் பெரும் சோகம் நிலவியுள்ளது.
முன்னதாக கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை 22–ந் தேதி காலையில் இதுபோன்ற விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்பிளேருக்கு புறப்பட்டது. 29 பேருடன் சென்ற அந்த விமானம் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே பறந்தபோது மாயமானது. இதைத்தொடர்ந்து விமானப்படை விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் கடலில் தேடும் பணிகள் நடந்தன. சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே இந்த பணிகளை நிறுத்துவதாக செப்டம்பர் 22–ந் தேதி விமானப்படை அறிவித்தது. அந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் நிலை பற்றிய விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story