கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு : மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் 311 பேர்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து மருத்துவக்குழு 311 பேரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் பாதிப்பினால் 17 பேர் உயிரிழந்தனர். அப்போது மாநில சுகாதாரத்துறை மேற்கொண்ட அதிதீவிர கண்காணிப்பு நடவடிக்கையினால் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இப்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. சுகாதார அறிவுரைகளை மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மூலம் வழங்கி வருகிறது.
எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞருக்கு சிகிச்சையளித்த இரு செவிலியர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இளைஞரின் இரு நண்பர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய மருத்துவக்குழுவும் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இப்போது இளைஞருடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 311 பேரை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story