கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு - தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு


கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு - தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2019 8:23 PM GMT (Updated: 4 Jun 2019 8:23 PM GMT)

கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் நீனா ஜாம்ப் என்ற பெண், தனது மாமியார் காந்தாவுடன் இணைந்து சமையல் செய்து கொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டர் காலியாகி விட்டது. மற்றொரு புதிய சிலிண்டரை எடுத்து கியாஸ் ஸ்டவ்வுடன் இணைப்பு கொடுத்தபோது கியாஸ் கசிந்து, சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் நீனா ஜாம்ப் மரணம் அடைந்தார். அவரது மாமியார் படுகாயம் அடைந்தார். சிலிண்டர் தயாரிப்பில் ஏற்பட்டிருந்த குறைபாடுதான் வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

2003-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து, நீனா ஜாம்ப் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 734-ஐ வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என இந்திய எண்ணெய் கழகத்துக்கும், அலோக் கியாஸ் ஏஜென்சி என்னும் கியாஸ் டீலருக்கும் டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தேசிய நுகர்வோர் ஆணையத்தில் இந்திய எண்ணெய் கழகம் மேல்முறையீடு செய்தது. முடிவில் கியாஸ் சிலிண்டர் வெடிப்புக்கு காரணம், அதன் தயாரிப்பில் ஏற்பட்டிருந்த குறைபாடுதான் என உறுதி செய்த தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே. அகர்வால், உறுப்பினர் எம். ஸ்ரீஷா ஆகியோர், டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து, பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 734-ஐ வட்டியுடன் இந்திய எண்ணெய் கழகமும், அலோக் கியாஸ் ஏஜென்சியும் தர உத்தரவிட்டனர். மேலும் மேல்முறையீடு செய்த இந்திய எண்ணெய் கழகம் ரூ.25 ஆயிரம் வழக்கு செலவாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Next Story