கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்- ஜெய்சங்கர்
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியம் தற்போது அதிகம் வலியுறுத்தப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இங்கு உள்ள பெரும்பான்மையான மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த அரசு உயிர்ப்புடன் வைத்து இருப்பதாகவும், இந்தியாவில் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியம் தற்போது அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே திறனை அதிகரிக்கச் செய்ய இயலும். உலகமயமாக்கல் கொள்கை சர்வதேச அளவில் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
உலகமயமாக்கல் குறித்த முந்தைய ஊகங்கள் பலவும் இனியும் ஊகங்களாக இருக்க முடியாது. உலகமயமாக்கல் அமலானால், சர்வதேச அளவில் எந்த அளவிற்கு ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது குறித்தும், திறமையானவர்கள் எவ்வாறு இடம் மாறுவார்கள் என்பது குறித்தும், சந்தை எவ்வாறு விரிவடையும் என்பது குறித்தும் தொடக்கத்தில் பல்வேறு ஊகங்கள் இருந்தன.
இந்திய பொருளாதாரம் உலகிற்கு உந்து சக்தியாக திகழ வேண்டுமானால், அதற்கு வெளியுறவுத்துறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். இந்தியர்கள் சர்வதேச அளவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தத் தேவையான சர்வதேச உறவுகளையும், கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் என கூறினார்.
Related Tags :
Next Story