2021 தேர்தல்; பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி


2021 தேர்தல்; பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 6 Jun 2019 5:53 PM IST (Updated: 6 Jun 2019 5:53 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.


ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரசாரம், அணுகுமுறையை வடிவமைத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பணியில் மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தாவிற்கு அதிர்ச்சி கொடுத்து 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியது. மாநிலத்தில் வாக்கு சதவீதமும் பா.ஜனதாவிற்கு உயர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையில்தான் மாநிலத்தில் போட்டியென்பதை உறுதிசெய்யும் வகையில் அங்கு களம் அமைந்துள்ளது. 2021-ல் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் கிஷோரிடம் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக மம்தா பானர்ஜி ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் இருதரப்பு இடையே பணிக்கான ஒப்புதல் கையெழுத்தாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கடந்த வருடம் பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு பெரிய வேலைகள் எதுவும் கிடையாது. ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. பிரசாந்த் கிஷோர் பணிகளால் நிதிஷ் குமாருக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கிறது. 

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றியை அடுத்து பிரசாந்த் கிஷோரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அணுகிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் 2014-ல் பிரதமர் மோடி வெற்றியடைய பெரும் உதவியாக இருந்தவர். 2015-ல் நிதிஷ் குமார் வெற்றியடையவும் பணியாற்றினார். 2017 உ.பி. தேர்தலில் காங்கிரசுக்காக அவர் பணியாற்றிய போது வியூகம் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் பஞ்சாப்பில் அவருடைய பணி காங்கிரசுக்கு பயனளித்தது.

Next Story