“பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும்” பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்று மாலத்தீவு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மாலத்தீவு,
2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று, மாலத்தீவின் மிக உயரிய விருது கௌரவத்துடன் வழங்கபட்டிருக்கிறது. நான் இதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது எனக்கு ஒரு மரியாதை மட்டுமல்ல, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் உறவுகளுக்கு மரியாதை அளிக்கிறது.
உங்கள் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மாலத்தீவு பாராளுமன்றத்தில் பேசுவதில் பெருமை அடைகிறேன். அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவும், மாலத்தீவும் ஒரே கலாச்சார பின்னணியை கொண்டது. இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலத்தீவு மக்கள் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்தனர். இதனை பார்த்து, உங்களின் நெருங்கிய நட்பு நாடும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பெருமை கொள்கிறது.
மாலத்தீவின் சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி, அமைதிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். 1988 -ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆகட்டும், 2004-ல் நடந்த சுனாமி தாக்குதல் ஆகட்டும் அல்லது தற்போது ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினையின் போதும், இந்தியா உதவி செய்துள்ளது.
மாலத்தீவிற்கு இந்தியா உதவி செய்ய தயாராக உள்ளது. இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான நட்பு எப்போதும் இருக்கும். இந்தியாவும் மாலத்தீவும் சிறந்த அண்டை நாடுகள்.
பயங்கரவாதம் எப்போதும் கவலை தரும் விஷயமாக உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். இருநாட்டிற்கும் பயங்கரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
பயங்கரவாதிகளால், அப்பாவி மக்கள் தினசரி , உலகில் எங்கேயாவது ஒரு மூலையில் உயிர் இழந்து வருகின்றனர். இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சிறந்த வழியாக உள்ளது. தொழில்நுட்பம் மட்டும் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள உதவாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்காக பூமியை நாம் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story