கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி
x
தினத்தந்தி 9 Jun 2019 3:11 AM IST (Updated: 9 Jun 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில், சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆட்சி அமைத்தபோது, காங்கிரசுக்கு 22 மந்திரி பதவியும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 12 மந்திரி பதவியும் ஒதுக்கப்பட்டது. மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்ததை அடுத்து காங்கிரசுக்கு ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. மேலும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 மந்திரி பதவி காலியாக உள்ளன. ஆகமொத்தம் மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, டாக்டர் சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி களத்தில் குதித்தனர். ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார். காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படுகின்றன. 2 சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கவுள்ளது. வருகிற 12-ந் தேதி புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.


Next Story