பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானிற்கு இந்திய அரசு கோரிக்கை


பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானிற்கு இந்திய அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2019 9:24 PM IST (Updated: 9 Jun 2019 9:24 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் வான் வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய அரசு, பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த  தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

இந்த சம்பவத்துக்குப்பிறகு பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தடை விதித்தது.  இதற்கிடையே மேலும் இந்த தடையை  மே மாதம் 30 ம் தேதி வரை நீட்டித்து  பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

பாகிஸ்தான் வான்வெளியில் மொத்தமுள்ள 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழித்தடங்களில் தற்போது வரை தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கிர்கிஸ்தானில் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (SCO) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.  அப்போது பாகிஸ்தான் வான் வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய அரசு, பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story