மத்திய மந்திரி ஆனது எப்படி? - சாரங்கி உருக்கம்


மத்திய மந்திரி ஆனது எப்படி? - சாரங்கி உருக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2019 8:59 PM GMT (Updated: 10 Jun 2019 12:16 AM GMT)

மத்திய மந்திரி ஆனது எப்படி என்பது குறித்து சாரங்கி விவரித்துள்ளார்.

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம், பாலசோர் தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பி.யாகி இருப்பவர் பிரதாப் சாரங்கி.

சாமியாராக விரும்பிய இவரை, மந்திரி ஆக்கி அழகு பார்க்கிறது பாரதீய ஜனதா கட்சி.

புவனேசுவரத்தில் நேற்று இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய சாரங்கி, “பாரதீய ஜனதாவில்தான் டீ விற்றவர் பிரதமர் ஆக முடியும், செய்தித்தாள் விற்றவர் கட்சிக்கு தலைவர் ஆக முடியும். குடிசையில் வசிப்பவர் மக்கள் பிரதிநிதியாகி மக்களுக்கு சேவை செய்ய முடியும்” என உருக்கமுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு மந்திரி பதவி கிடைத்த கதையை விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மந்திரி பதவிக்காக நான் ஒரு போதும் ஆசைப்பட்டது கிடையாது. அது தானாகவே வந்தது. மக்கள் பணியாற்றுவதற்கு அது மிகப்பெரிய பொறுப்பை கொண்டு வந்துள்ளது. கட்சித்தலைவர் அமித்ஷா 2 முறை என்னை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் எனது செல்போன் என்னிடம் இல்லை. வேறு ஒருவரிடம் இருந்தது. எனவே அவருடன் பேச முடியவில்லை. நான் அவரை திரும்ப அழைத்து பேசினேன். அப்போது அவர் (30-ந் தேதி) மாலையில் நடைபெறுகிற பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். மத்திய மந்திரி பதவி ஏற்பதற்கு கண்டிப்பாக பதவி ஏற்பு விழாவில் நான் இருக்க வேண்டும் என்று அவர் தெளிவாக கூறி விட்டார். கடவுள்தான் மக்கள் பணியாற்றுவதற்கு இந்த வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story