தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் ரெயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம்? என தகவல் + "||" + Four people aboard Kerala Express die in Jhansi, allegedly due to heat

உத்தரப்பிரதேசத்தில் ரெயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம்? என தகவல்

உத்தரப்பிரதேசத்தில் ரெயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம்? என தகவல்
உத்தரப்பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்தாண்டு நாட்டிலேயே அதிகபட்ச வெப்பமாக, ராஜஸ்தானில் கடந்த வாரம் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அடுத்த 4 நாட்களுக்கு மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், அரியானாவில் கடும் வெயில் கொளுத்தும் என்று  தெரிவிக்கப்பட்ட நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பயணம் மேற்கொண்டனர். 

ரெயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5  பேருக்கும் ஓடும் ரெயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் விவரம்:  பச்சைய்யா (வயது 80) பாலகிருஷ்ண ராமசாமி (வயது 69) தனலட்சுமி (வயது 74)  சுப்பராய்யா (வயது 71). தெய்வானை (வயது 71) மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தவர்களுக்கு ஜான்சி அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் பயணித்தபோது வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத  பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.