அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் கரையை கடக்கிறது


அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் கரையை கடக்கிறது
x
தினத்தந்தி 11 Jun 2019 7:30 PM IST (Updated: 11 Jun 2019 7:30 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் வியாழக்கிழமை கரையை கடக்கிறது.

தென்மேற்கு பருவமழை 8–ந் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.  இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக தற்போது மாறி இருக்கிறது. அரபிக்கடலில் புயல் உருவாகி இருக்கிறது. இதற்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகருகிறது. குஜராத் மாநிலம் விராவல் பகுதி அருகே புயல் வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் பகுதி வழியாகவே புயல் செல்வதால் கடல் பகுதிகளில் தான் அதிகளவு மழை பெய்து கொண்டு இருக்கிறது. 

கேரளாவில் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் புதன்கிழமை அனல் காற்று வீசும். மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று தமிழக பகுதிகளில் வீசுவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

புயல் கரையை கடந்த பிறகு, தென்மேற்கில் இருந்து காற்று வரும்போது தான் தமிழகத்தில் வெப்பம் குறையும். தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 14, 15–ந் தேதிகளில் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. புயல் கரையை கடந்த பிறகு தான் அதை உறுதியாக சொல்ல முடியும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குஜராத்தில் புயல் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story