ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2


ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2
x
தினத்தந்தி 12 Jun 2019 9:48 AM GMT (Updated: 12 Jun 2019 10:36 PM GMT)

சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடியில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து உள்ளது.

இதில் முதல் முறையாக நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் ரோவர் ஆய்வு வாகனம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனம் நிலவின் தென்துருவமுனை பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இப்பகுதியில் இதுவரை எந்தவொரு நாடும் ஆய்வு செய்ததில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான்-2 விண்கலம் பல்வேறு காரணங்களால் பலமுறை  ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்கலம் ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:- சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51-க்கு விண்ணில் செலுத்தப்படும். சந்திராயன்-2  3.8 டன் எடை கொண்டது ஆகும் என்றார்.

தற்போது இஸ்ரோவுக்கு சொந்தமான 49 செயற்கைகோள்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதில் 18 செயற்கைகோள்கள் பூமி கண்காணிப்பு பணியை மட்டும் செய்து வருகிறது. இவற்றின் மூலம்தான்  புயல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் உரிய நேரத்தில் பெறப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Next Story