கேரளாவில் வினோத சம்பவம் : பசு விழுங்கிய 5 பவுன் நகை 2 ஆண்டுக்கு பிறகு மீட்பு


கேரளாவில் வினோத சம்பவம் : பசு விழுங்கிய 5 பவுன் நகை 2 ஆண்டுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:10 PM GMT (Updated: 13 Jun 2019 10:10 PM GMT)

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் வசித்து வரும் ஆசிரியர் தம்பதி சுஜா உல்–முல்க், சஹினா. அண்மையில் இவர்களுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கொல்லம்,

6 மாதங்களுக்கு முன்பு வீட்டின் பயன்பாட்டுக்காக பக்கத்து கிராமமான கரவலூரில் இருந்து ஸ்ரீதரன் என்பவரிடம் இவர்கள் நிறைய வறட்டிகளை வாங்கி உள்ளனர்.

கடந்த 5–ந்தேதி அதில் ஒரு வறட்டியை எரிப்பதற்காக இரண்டாக உடைத்தபோது அதற்குள் 5 பவுன் தங்க சங்கிலி ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த சங்கிலியில் இலியாஸ் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆச்சரியமடைந்த ஆசிரியர் தம்பதியினர் தங்க சங்கிலிக்கு உரியவரைத் தேடி அதை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றிய தகவல் பரப்பப்பட்டது. அந்த தம்பதியின் விடா முயற்சிக்கு பலனும் கிடைத்தது. அவர்களின் விசாரணையில், சதயமங்கலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்னும் கிராமத்தில் வசிக்கும் இலியாசுக்கு அந்த தங்க சங்கிலி சொந்தம் என்பது தெரிய வந்தது.

சரி இந்த நகை வறட்டிக்குள் எப்படி வந்தது? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலும் தெரிய வந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இலியாசின் தங்கச் சங்கிலி காணாமல் போய் உள்ளது. வயல் வெளியில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு புல்லுடன் சேர்த்து விழுங்கிவிட்டது. ஆனால் இதுபற்றி இலியாசுக்கு எதுவும் தெரியவில்லை. தனது தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டது என்று நினைத்து அதை தேடாமல் விட்டு விட்டார்.

இதனிடையே, ஆசிரியர் தம்பதி, நகையை விழுங்கிய பசுவை தேடிக்கண்டு பிடிக்கும் முயற்சியிலும் இறங்கினர். அப்போது அந்த பசு விற்கப்பட்டு பல கைகள் மாறிவிட்டது தெரிய வந்தது. அதனால் நகையை விழுங்கிய அந்த பசுவை தேடும் முயற்சியை அவர்கள் கை விட்டனர். விரைவில் ஆசிரியர் தம்பதியினர், போலீசார் முன்னிலையில் தங்கச் சங்கிலியை இலியாசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.


Next Story