கர்நாடகாவில் மேலும் இரு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்பு
கர்நாடகாவில் மேலும் இரு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பெங்களூர்,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சிப்பார்கள் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததால், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா? என்ற குழப்பம் உண்டானது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க, முதற்கட்டமாக அவர்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டதால், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.
மாறாக வருகிற 14-ந் தேதி (அதாவது இன்று) மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது கர்நாடகாவில் மேலும் இரு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாகி உள்ளனர். முதல்-மந்திரிக்கு எதிராக அவ்வப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் குமாரசாமி அதிரடியாக இரு சுயேட்சை எம்.எல்.ஏக்களை மந்திரியாக்கி உள்ளார். ஆட்சியை தக்கவைக்க, குமாரசாமி நடவடிக்கை எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story