2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர் பழனிசாமி?


2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர் பழனிசாமி?
x
தினத்தந்தி 15 Jun 2019 6:53 AM GMT (Updated: 15 Jun 2019 6:53 AM GMT)

டில்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை மூன்றாவது முறையாக தொடர செய்யும் நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி களமிறங்கியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். 2014-ம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராவதற்கு, ஐபேக் நிறுவனம் பின்னணியில் இருந்து செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில், அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாதது அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக உள்ளது. இதனால், பல்வேறு கட்சிகளுக்கு வெற்றி பெற்று தந்த பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் பழனிசாமி,  ஐபேக் நிறுவனத்தின் இயக்குநர்களான ரிஷிராஜ் சிங் மற்றும் வினேஷ் சந்தேல் ஆகியோரை  இன்று மாலை புதுடெல்லியில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2021-ம் ஆண்டில் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கையாள்வது குறித்த  விஷயமாக இருக்கலாம் என சென்னை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

கடந்த வார தொடக்கத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரசாரங்களில்  சில அம்சங்களை  பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் கையாண்டு உள்ளது.

Next Story