மீண்டும் பணியை தொடருங்கள் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்


மீண்டும் பணியை தொடருங்கள்  டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Jun 2019 1:20 PM GMT (Updated: 15 Jun 2019 1:20 PM GMT)

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் மீண்டும் பணியை தொடருங்கள் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொல்கத்தா,

நோயாளியின் உறவினர்களால் சக டாக்டர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில்  அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 700 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மருத்துவமனைகளில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, வேலைகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஜூன் 17 அன்று நாடு தழுவிய டாக்டர்கள் ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. 

ஜூன் 10 ம் தேதியன்று கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து நாடு முழுவதும் டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்தது  வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அனைத்து மருத்துவர்களிடம் மீண்டும் பணியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  ஜூன் 10-ம் தேதி நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்.  

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களின் அனைத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.    
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நான் என்னுடைய மந்திரிகளை அங்கு அனுப்பி வைத்தேன். நேற்றும் இன்றும் சுமார் 5 மணி நேரம் காத்துக்கொண்டிருந்தனர்.  போராட்டக்குழுவினர் அங்கு அவர்களை சந்திக்க வரவில்லை.  நீங்கள் அரசியல் அமைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story