ரெயில்களில் மசாஜ் சென்டர்: அறிவிப்பை திரும்ப பெற ரெயில்வே நிர்வாகம் முடிவு?
ரெயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். ரெயில்களில் பயணிக்கும் மக்கள் தினசரி பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். ரெயில் பயணிகளுக்கு, பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நீண்டதூர பயணிகளுக்கு களைப்பு, சலிப்பு தெரியாமல் இருக்க ரெயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய ரெயில்வே முடிவு செய்தது.
முதற்கட்டமாக, இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் கால் அல்லது தலை மசாஜ் சேவைக்கு ரூ.100 வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட இந்த ரெயில்களில் 3 அல்லது 5 மசாஜ் ஊழியர்கள் வரை பயணம் செய்வார்கள். இந்திய ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரெயில்வே துறை ஆண்டுக்கு 20 லட்சம் முதல் 90 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என இந்தூர் தொகுதி பாரதிய ஜனதா எம்பி ஷங்கர் லால்வானி,
ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார். அதில், ரெயில்களில் பெண்களும் பயணிக்கும் போது அவர்களுக்கு
அசவுகரியங்கள் ஏற்படும் என்பதால் மசாஜ் சென்டர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதுபோன்ற சேவைகளை பயணிகளுக்கு முன்னால் வழங்குவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ரெயில்களில் மசாஜ் சேவை தொடங்குவது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்தூரில் இருந்து செல்லும் ரெயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story