பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 84 பேர் பலி; மருத்துவமனை சென்றார் மத்திய மந்திரி


பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 84 பேர் பலி; மருத்துவமனை சென்றார் மத்திய மந்திரி
x
தினத்தந்தி 16 Jun 2019 7:30 AM GMT (Updated: 16 Jun 2019 7:30 AM GMT)

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 84 பேர் பலியான நிலையில் மத்திய சுகாதார துறை மந்திரி ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்.

முசாபர்பூர்,

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.  ஆனால் பீகாரின் ஆளும் நிதீஷ் குமார் அரசு, குறைந்த சர்க்கரை அளவால் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என தெரிவித்தது.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

நோய் பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் இன்றும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருந்தது.  இந்நிலையில், பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 84 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் அரசு தொடக்கம் முதல் பணியாற்றி வருகிறது.  இங்கு மருந்து பற்றாக்குறை இல்லை.  எனினும், படுக்கை வசதி மற்றும் ஐ.சி.யூ. ஆகியவை அவசரகால நிலையுடன் ஒப்பிடும்பொழுது போதிய அளவில் இல்லை என மாநில மந்திரி கூறியுள்ளார்.

மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ச வர்தன் மற்றும் இணை மந்திரி அஸ்வினி சவுபே சூழ்நிலையை ஆராய்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இன்று சென்றனர்.  அங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.  தொடர்ந்து வேண்டிய உதவிகளை செய்யும்படி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

Next Story