‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு


‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 2:59 PM GMT (Updated: 16 Jun 2019 9:54 PM GMT)

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்க டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.

இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது பெரும் செலவை குறைக்க முடியும். அடிக்கடி தேர்தல்கள் நடத்துவதை தவிர்க்க முடியும். அரசு அதிகாரிகளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் தேவை எழாது. ஆனால் இதில் அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இந்த நிலையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் 19-ந் தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை வகிப்பார்.

இதற்கான அழைப்பு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எழுதி உள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கொள்கை மீதான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகள் பெறப்படும்.

நாடாளுமன்றத்தை இன்னும் அதிகளவில் பயனுள்ள விதத்தில் நடத்துவதற்கான வழிவகைகள், 75-வது சுதந்திர தினத்துக்குள் புதிய இந்தியாவை உருவாக்குதல், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றியும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும், 20-ந் தேதி எம்.பி.க்கள் கூட்டத்தையும் கூட்டி பிரதமர் மோடி இவை தொடர்பாக விவாதிக்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.


Next Story