போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு; ஊடகங்களுக்கு அனுமதி


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு; ஊடகங்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:11 PM IST (Updated: 17 Jun 2019 4:11 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை நேரடி ஒலிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு மம்தா பானர்ஜி அனுமதி வழங்கியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்து உள்ளது.  இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஷாகித் (வயது 77) என்பவர் கடந்த 10ந்தேதி உயிரிழந்து விட்டார்.

இதற்கு மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என கூறி அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில், பரிபாஹா முகோபாத்யா என்ற மருத்துவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் இந்த விவகாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  ஆனால், போராட்டத்தினை விட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி அரசு கூறியது.

இதுபற்றி இளநிலை மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, நோயாளியின் உறவினர்கள், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர கூடாது.

எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.  போலீசாரும் எங்களது புகார்களை கண்டுகொள்ளவில்லை.  இந்த சூழலுக்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.  இதற்கு முதல் அமைச்சர் உறுதி தரவேண்டும்.  அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.  எங்களது கோரிக்கைகளை போஸ்டர்களின் வழியே நாங்கள் விளக்கி விட்டோம் என கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.  இதன்படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவ கல்லூரியில் இருந்தும் 2 பேர் பிரதிநிதிகளாக வந்து முதல் மந்திரியை சந்தித்து பேசுகின்றனர்.  இந்த சந்திப்பு ஹவுரா நகரில் உள்ள தலைமை செயலகத்திற்கு அருகேயுள்ள அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  ஆனால், இதற்கு முதலில் மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்தது.  இந்நிலையில், நேரடி ஒலிபரப்புக்கு மம்தா அனுமதி வழங்கியுள்ளார்.

Next Story