டெல்லியில் மற்றொரு தாக்குதல் சம்பவம்; போராட்ட களத்தில் இறங்கிய எய்ம்ஸ் மருத்துவர்கள்


டெல்லியில் மற்றொரு தாக்குதல் சம்பவம்; போராட்ட களத்தில் இறங்கிய எய்ம்ஸ் மருத்துவர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2019 5:48 PM IST (Updated: 17 Jun 2019 5:48 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளம் போன்று டெல்லியில் மருத்துவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து அங்கு சக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை நோயாளி ஒருவர் உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது உறவினர்கள் அங்கிருந்த இரண்டு மருத்துவர்களை அடித்து தாக்கினர்.

இதனால் தங்களுக்கு பாதுகாப்பு கோரி, மேற்கு வங்காள இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள், இந்த விவகாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  ஆனால், போராட்டத்தினை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி அரசு கூறியது.

ஆனால் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்  மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை அடுத்து மேற்கு வங்காளத்தில் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் இதேபோன்று, மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.  அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜெய் பிரகாஷ் நாராயண் அவசர சிகிச்சை மையத்திற்கு நேற்றிரவு 11.30 மணியளவில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற ஒருவர் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

அங்கிருந்த மருத்துவர், தீவிர ஆபத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.  அதனால் சற்று பொறுத்திருங்கள்.  அவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

ஆனால், அவருடன் வந்தவர்கள், முன்னுரிமை அளித்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்கிருந்த மருத்துவரிடம் வலியுறுத்தி உள்ளனர்.  குடிபோதையில் இருந்தனர் என கூறப்படும் அவர்கள், தொடர்ந்து மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.  அடித்து, உதைத்தும் உள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.  தப்பியோடிய 3வது நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் இளநிலை மருத்துவர்கள், இன்று மதியம் முதல் நாளை காலை 6 மணிவரை போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.  அவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை வளாகத்தினுள் எதிர்ப்பு பேரணி ஒன்றையும் நடத்தினர்.

Next Story