பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 104 பேர் மரணம்; கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட மந்திரியால் சர்ச்சை


பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 104 பேர் மரணம்; கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட மந்திரியால் சர்ச்சை
x
தினத்தந்தி 17 Jun 2019 3:51 PM GMT (Updated: 17 Jun 2019 3:51 PM GMT)

பீகாரில் மூளை காய்ச்சல் மரணம் பற்றிய சுகாதார துறை கூட்டத்தில் மாநில சுகாதார மந்திரி கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முசாபர்பூர்,

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் நேற்றும் 3 பேர் உயிரிழந்தனர்.  இதனால் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருந்தது.  இந்நிலையில், பலி எண்ணிக்கை இன்று 104 ஆக உயர்ந்துள்ளது.

முசாபர்பூர் நகரில் மூளை காய்ச்சலுக்கு பலர் மரணம் அடைந்தது பற்றி மாநில சுகாதார துறை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் மாநில சுகாதார மந்திரி மங்கள் பாண்டே கலந்து கொண்டார்.  அவர் கூட்டத்தினிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் ஸ்கோர் பற்றி கேட்டுள்ளார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பீகாரின் அவுரங்காபாத் நகரில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ஜன அதிகார கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு கொடி காட்டினர்.

Next Story