ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 வீரர்கள் காயம்


ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:00 AM IST (Updated: 18 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானார்கள்.

அதுபோல், புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று உளவுத்துறை தகவல் ஒன்றை நேற்று முன்தினம் இந்தியாவிடம் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டது. அதனால், புல்வாமாவில் உஷார்நிலை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் எச்சரித்தது போலவே, புல்வாமாவில் நேற்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் அரிஹால்-லஸ்சிபோரா சாலையில் நேற்று ராணுவத்தின் ராஷ்டிரீய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அது, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்படாத வாகனம் ஆகும். ஈத்கா அரிஹால் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. கூடுதலாக படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல், பயங்கரவாதிகள் தப்பிஓடி விட்டனர்.


Next Story