தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்!


தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்!
x
தினத்தந்தி 18 Jun 2019 4:20 PM IST (Updated: 18 Jun 2019 6:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் வாழ்க.. பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க.. நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள்!

புதுடெல்லி,

பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க. எம்.பி.க்களை போல தமிழ் வாழ்க என்று கூறினார்கள். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பதவியேற்றதும் உலக தமிழர்களே ஒன்று கூடுங்கள் என்று முழக்கமிட்டனர்.

தமிழ் வாழ்க என்று தமிழக எம்.பி.க்கள் சொன்னபோதெல்லாம் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோ‌ஷமிட்டனர்.

அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டார்.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழியும் தமிழிலேயே பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் உறுதி மொழி எடுத்து முடித்ததும் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, பழனி மாணிக்கம் மற்றும் நவாஷ்கனி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

வசந்தகுமார் பதவி ஏற்று முடித்ததும் ஜெய் ஜவான், ஜெய் கிஷான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க என்று கூறினார்.

மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #தமிழ்வாழ்க ஹேஷ்டேக் உள்ளது.

தெலுங்கானா ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாசுதீன் ஒவைசி இன்று  பாராளுமன்ற உறுப்பினராக  பதவி ஏற்றுகொண்டார். அப்போது பாரதீய ஜனதா தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம் என்றும் கோஷம் எழுப்பினர். பதவி ஏற்று கொள்ள  அவரது பெயர் அழைக்கப்பட்டவுடன் கோஷங்கள் தொடங்கியது.  அவர் ஆவணங்களில் கையெழுத்திடும் வரை இது தொடர்ந்தது. அதற்கு கவலைப்படாத ஒவைசி  கோஷங்களால் கைகளை உயர்த்துவதைக் காண முடிந்தது. உருது மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்ட ஒவைசி உறுதிமொழியை ஜெய் பீம், அல்லாஹ்-ஓ-அக்பர் மற்றும் ஜெய் பாரத் என்று கூறி முடித்தார்.

Next Story