‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு
ஒரே தேசம்-ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.
இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது பெரும் செலவைக் குறைக்க முடியும். அடிக்கடி தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியும். அரசு அதிகாரிகளை, ஊழியர்களைத் தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் தேவை எழாது. ஆனால் இதில் அனைத்துக்கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இந்த நிலையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள டெல்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை வகிப்பார்.
இதற்கான அழைப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எழுதி உள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கொள்கை மீதான அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் பெறப்படும். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவது இல்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முக்கியமான விவகாரம் தொடர்பாக அரசியலமைப்பு மற்றும் தேர்தல் நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். அதுபோக நேர்த்தியான பதிலைத் தரவேண்டும், எங்களுடைய கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, போதிய நேரமில்லையெனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story