நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு - மாநில தலைமையில் மாற்றம் இல்லை


நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு - மாநில தலைமையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 20 Jun 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைமையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பெங்களூரு,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆளும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், ஒரு தொகுதியை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டே, 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மாநில தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவும், செயல் தலைவராக ஈஸ்வர்கன்ட்ரேவும் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக காங்கிரஸ் கமிட்டியில் 170 நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பதவியும் பறிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், “கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர்களை அவமதித்து பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


Next Story