இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு


இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 2:52 PM IST (Updated: 20 Jun 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்றுகூறி பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது என்று இந்தியா கூறிவிட்டது. பாகிஸ்தான் பலமுறை பேச்சுவார்த்தைக்கு கோரிக்கையை முன்வைத்தாலும் இந்தியா அதனை நிராகரித்தது. 

இந்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிபியுன் பத்திரிகையில், இந்திய பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளனர். பிராந்திய நலனுக்காக பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டது. இதனை இந்திய அரசு மறுத்துள்ளது.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், பாகிஸ்தான் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் மோடியும், ஜெய்சங்கரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் பிரதமர் மோடிக்கும், ஜெய்சங்கருக்கும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் செய்தியில் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் கூட்டுறவு, ஒத்துழைப்பை இந்தியா பராமரிக்க விரும்புகிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பிரதமர் மோடி கொடுத்த பதிலில் நம்பிக்கையை ஏற்படுத்தி, பயங்கரவாதம் இல்லாத சூழலையும், வன்முறையற்ற நிலையையும், விரோதமில்லாத போக்கையும் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்திருந்தார். இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த எந்தவிதமான பதிலையும், கருத்தையும் பிரதமர் மோடி சார்பில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடவும் இல்லை என கூறியுள்ளார். 

Next Story