ஜனாதிபதி உரையின் போது மொபைல் போனில் மூழ்கி இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி


ஜனாதிபதி உரையின் போது  மொபைல் போனில் மூழ்கி இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 20 Jun 2019 5:21 PM IST (Updated: 20 Jun 2019 5:21 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது மொபைல் போனில் மூழ்கி இருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

புதுடெல்லி,

17வது மக்களவைத் தேர்தலில் கண்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி அமைதியற்ற மனநிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்துவிட்ட போதும் ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சீர்திருத்த மாற்றங்களை ராகுல் காந்தி கொண்டு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ராகுல் காந்தியின் முடிவை மாற்ற குடும்பத்தினரும், கட்சியினரும் எடுத்த முயற்சிகள் தோற்றன.

இந்த நிலையில்  பாராளுமன்ற  கூட்டு குழு கூட்டத்தில் இன்று ஜனாதிபதி ராம்நாத் உரையாற்றும்போது, அதில் கவனம் செலுத்தாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மொபைல் போனில் மூழ்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். லோக்சபா கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ஜனாதிபதி உரையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, தனது மொபைல் போனை எடுத்து அதில் கவனம் செலுத்தினார். 

சுமார் 24 நிமிடங்கள் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த அவர் அதில், ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து மொபைல்போனில் படம் பிடித்த ராகுல்  காந்தி, 20 நிமிடங்கள் தனது தாயார் சோனியாவுடன் பேசி கொண்டிருந்தார். ஜனாதிபதி உரைக்கு எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். சோனியாவும் மேஜையை தட்டினார். ஆனால், ராகுல் காந்தி அதனை கண்டுகொள்ளவில்லை.

ஜனாதிபதி தனது உரையில் சர்ஜிக்கல் தாக்குதல், பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் குறித்து குறிப்பிட்டார். அப்போது, சோனியா உள்ளிட்ட அனைத்து எம்.பி.,க்களும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு மாறாக, ராகுல் காந்தி தரையை பார்த்து கொண்டிருந்தார். இடைஇடையே, ராகுல்  காந்தியை சோனியா கவனித்து கொண்டிருந்தார். ஆனால் அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story