பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
புதுடெல்லி,
17-வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்து உள்ளது. தேர்தலுக்கு பின் முதன் முதலாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இந்த மாதம் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 5-ந் தேதி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி, நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டம் (எம்.பி.க்கள் கூட்டம்) கடந்த 25-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதன்லால் சைனி திடீரென்று மரணம் அடைந்ததால் அன்று அந்த கூட்டம் நடைபெறவில்லை.
அப்போது ரத்து செய்யப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இது மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றபின் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம் தொடங்கியது. பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களும், பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சபையில் எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story