லோக்பால் 480 புகார்களை தள்ளுபடி செய்தது ஊழலுக்கு சம்பந்தமில்லாத புகார்களை தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை


லோக்பால் 480 புகார்களை தள்ளுபடி செய்தது ஊழலுக்கு சம்பந்தமில்லாத புகார்களை தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை
x
தினத்தந்தி 2 July 2019 6:34 PM IST (Updated: 2 July 2019 6:34 PM IST)
t-max-icont-min-icon

லோக்பால் அமைப்பு 480 புகார்களை தள்ளுபடி செய்துள்ளது. ஊழலுக்கு சம்பந்தமில்லாத புகார்களை தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழலை எல்லாமட்டத்திலும் ஒழிக்கவேண்டும், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், ஊழல் பற்றிய செய்திகள் வெளியே வந்ததே தவிர, வலுவில்லாத சட்டங்களால் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலைதான் இருந்தது.  இந்த நிலையில், வலுவான சட்டம் வேண்டும் என்ற அடிப்படையில் 1971-ம் ஆண்டில் இருந்து மசோதாதான் தயாரானது.

எந்தவித மசோதாவும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், 76 வயதான காந்தியவாதி அன்னா ஹசாரே 2013–ம் ஆண்டு மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம், அதற்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் ஆதரவும் வேறுவழியில்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேறியதே தவிர, இந்த அமைப்பு உருவாக்கப்படாமல் இருந்தது. 

2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17–ந் தேதி மாநிலங்களவையிலும், அடுத்தநாள் டிசம்பர் 18–ந் தேதி மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கப்படவேண்டும். பேரும் போராட்டம் தொடர்ந்த நிலையில் மத்தியில் லோக்பால் அமைப்பின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஸ் கடந்த மார்ச் 23–ந்தேதி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிற அதிகாரிகளும் பொறுப்பு ஏற்றனர். 

லோக்பால் அமைப்பில் பொதுமக்கள் எப்படி புகார் செய்யலாம் என்பது பற்றி மத்திய அரசு இன்னும் ஒரு வழிமுறையை அறிவிக்கவில்லை. என்றாலும் ஏராளமானோர் லோக்பால் அலுவலகத்தில் புகார்களை அளித்துவந்தனர்.

இந்நிலையில்  லோக்பால் அமைப்பு 480 புகார்களை தள்ளுபடி செய்துள்ளது. ஊழலுக்கு சம்பந்தமில்லாத புகார்களை தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், லோக்பால் அலுவலகத்துக்கு வந்த அனைத்து புகார்களையும் பரிசீலனை செய்தோம். மே மாதம் 31–ந்தேதி வரை பெறப்பட்ட 480 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பரிசீலனையில் அவை அனைத்தும் போக்பால் வரம்புக்குள் வரவில்லை என்பது தெரிந்ததால் அவை தள்ளுபடி ஆகியுள்ளது. இதுபற்றி புகார்தாரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பு தேசிய அளவில் ஊழல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஊழலுக்கு தொடர்பில்லாத புகார்களை கொடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூதியம், வேலை தொடர்பானவை, மக்கள் குறைகள் போன்ற புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரபூர்வ வலைத்தள பக்கங்களில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். 

Next Story