11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: விசாரணையை 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: விசாரணையை 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 3 July 2019 7:34 AM GMT (Updated: 3 July 2019 11:48 PM GMT)

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை 30-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மற்றும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிரான வழக்கு ஆகியவற்றின் மீதான விசாரணையை 30-ந் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டு, இரு வழக்குகளும் அன்று தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தது.

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் வக்கீல்கள் வாதம் முடிவடைந்து உள்ளது.

இந்த வழக்குகளை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வுபெற்ற நிலையில் இந்த வழக்குகள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி காலம் 5 ஆண்டுகள் முழுவதும் இப்படியே தொடர முடியுமா? சட்டசபையை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து உள்ளன.

இரு தரப்பிலும் எதிர்பதில் வாதங்களை முன்வைக்க வேண்டிய நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வுபெற்று விட்டார். அதனால் இந்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதப்பட்டு வருகிறது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிரான வழக்கு. அது உடனடியான விசாரிக்கப்பட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்யுமாறு சபாநாயகருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் ஆகியோர் வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த இரு வழக்குகளும் வெவ்வேறு தன்மை கொண்டவை. குறிப்பாக சம்பந்தப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் திரும்பப் பெறப்பட்டதால் அந்த விவகாரம் காலாவதியாகி விட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைமை வந்து விட்டது. எனவே அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கு செல்லாதது ஆகிவிட்டது என்பதை உத்தரவில் தெரிவிப்பதற்காக, இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றனர்.

உடனே மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், “அப்படியெனில் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டது என்பதற்கான ஆவணங்களை நாங்கள் வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்கிறோம். மேலும் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். கூடுதல் காலம் தள்ளிப்போடக் கூடாது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் இந்த இரு வழக்குகளின் விசாரணையையும் வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இரு வழக்குகளும் அன்று தனித்தனியாக விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.


Next Story