நீதிபதிகளை தேநீர் விருந்தில் தேர்ந்தெடுக்கிறார்கள் -மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே பரபரப்பு கடிதம்


நீதிபதிகளை தேநீர் விருந்தில் தேர்ந்தெடுக்கிறார்கள் -மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே பரபரப்பு கடிதம்
x
தினத்தந்தி 3 July 2019 5:11 PM IST (Updated: 3 July 2019 6:06 PM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதுடெல்லி: 

நீதிபதிகளை நியமனம் செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் "தேநீர் விருந்தில்  தேர்ந்தெடுக்கிறார்கள்" என பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற போகும் நீதிபதி ரங்நாத் பாண்டே கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்நாத் பாண்டே கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அடுத்த நீதிபதி நியமிப்பதில் நீதிபதி உறவினர்களுக்கு தான் என்பது உறுதி செய்யப்படுகிறது.

"உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே மூத்த நீதிபதிகளுக்கு பிடித்த மற்றும் சாதகமாக இருக்கும் நீதிபதிகள் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுமுறை ரகசியமாக நடைபெறுகிறது. அதன் பிறகு தான் அவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் நீதித்துறையில் தனது 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை (National Judicial Appointments Commission) உங்கள் அரசாங்கம் கொண்டுவந்தபோது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தங்களது அதிகார வரம்பில் தலையிடுவதாகக் கருதிக் கொண்டு, அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்து, இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.” இதன் மூலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் குடும்ப உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story