ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா
ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.
சர்வதேச அரங்கில் கடும் நெருக்கடி காரணமாக பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடி போன்ற பல குற்றங்களை செய்ததற்காக பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய நெருங்கிய உதவியாளருக்கு எதிராக பஞ்சாப் மாகாண போலீஸ் 23 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஹபீஸ் சயீத் 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. லஷ்கர் இ தொய்பா தலைவனான அவனுக்கு எதிராக பாகிஸ்தான் விசாரணை முகமைகள் வழக்குகளை பதிவு செய்வதில் தீவிரம் காட்டுகிறது. விரைவில் அவனை கைது செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவனுடைய 11 உதவியாளர்கள் விசாரணை முகமைகளின் வளையத்திற்குள் வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பேசுகையில் “இதுபோன்ற வேஷம் போடும் நடவடிக்கைகளால் ஏமாற்ற வேண்டாம். பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நேர்மையான நடவடிக்கை எடுப்பது, பாகிஸ்தான் அந்நாட்டு மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கையை எடுக்கும் திறனின் அடிப்படையிலானது”என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story