10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ள நிலையில், 20 ரூபாய் நாணயத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்குமா?


10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ள நிலையில், 20 ரூபாய் நாணயத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்குமா?
x
தினத்தந்தி 5 July 2019 4:15 PM IST (Updated: 5 July 2019 5:03 PM IST)
t-max-icont-min-icon

புதிய 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என்று  தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், பார்வையற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

இப்போது 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும், அதனை யாரும் மதிப்பது இல்லை. ஏனென்றால், அளவில் பெரிதாகவும் வெயிட்டாகவும் இருப்பதால் பெரும்பாலான கடைகளில் இந்த நாணயத்தை யாரும் வாங்குவதில்லை. பஸ் கண்டக்டர்கள் கூட, இதனை திருப்பி தந்து விடுகிறார்கள். சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விடுகிறார்கள். இந்தநிலையில், புதிய 20 ரூபாய் நாணயம் எதற்காக என்று பொதுமக்களிடம் பரவலாக கேள்வி எழுந்துள்ளது.

தற்போது  20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 10 ரூபாய் நாணயத்தை வைத்து அல்லல்படும் நிலையில் புதியதாக வரும் 20 ரூபாய் நாணயத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரூ.10 நாணயங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தபோது, அந்த நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், பஸ்களில் ரூ.10 நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டன.  அதனைத்தொடர்ந்து ரூ.10 நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story