2020 ஏப்ரலுக்குள் ரூ.639 கோடி செலவில் ராணுவத்திற்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் வாங்கப்படும் மத்திய அரசு
2020 ஏப்ரலுக்குள் ரூ.639 கோடி செலவில் ராணுவத்திற்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் வாங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் ஆயுதப்படைகளுக்கு வாங்கப்படும் குண்டு துளைக்காத உடைகள் குறித்த கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில், இந்திய ஆயுதப்படைகளுக்கு கடந்த 2009–ம் ஆண்டு நிலவரப்படி 3,55,755 குண்டு துளைக்காத உடைகள் பற்றாக்குறையாக இருந்தன. நீண்ட காலமாக இதற்கான கொள்முதல் நடைபெறவில்லை.
பின்னர் 1.86 லட்சம் உடைகளுக்காக 2016–ம் ஆண்டு கொள்முதல் பரிந்துரை வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி டெண்டர் வழங்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ள இந்த டெண்டரின்படி, 1,86,138 குண்டு துளைக்காத உடைகளை ரூ.638.97 கோடியில் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 8–ந் தேதிக்குள் தயாரித்து வழங்க வேண்டும். இந்த உடைகளுக்கான தர பரிசோதனை முடிந்து ஏற்கனவே 10 ஆயிரம் உடைகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. வருகிற அக்டோபர் 8–ந் தேதிக்குள் மேலும் 37 ஆயிரம் உடைகள் கிடைக்கும்.
இந்த உடைகளுக்கான செயற்கை இழைகள் போன்ற மூலப்பொருட்களை சீனா மற்றும் தைவானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் டெண்டர் விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், டெண்டரை தகுதி நீக்கமும் செய்யப்படும். குண்டு துளைக்காத உடை என்பது ஒரு பாதுகாப்பு உபகரணம் ஆகும். எனவே இதன் தரத்தில் சமரசத்துக்கே இடமில்லை. அந்தவகையில் இந்திய ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு குண்டு துளைக்காத உடைகள் மிகுந்த தரத்துடன் வழங்கப்படுகிறது. ஆயுதப்படைகளுக்கு உடனடி தேவைக்காக 50 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகள் தயாரிப்பை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு கடந்த 2016–ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த உடைகள் அனைத்தும் தர பரிசோதனைக்குப்பின் கடந்த 2017–ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story