கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி


கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்:  மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய  எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி
x
தினத்தந்தி 9 July 2019 6:29 AM IST (Updated: 9 July 2019 6:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 13 மாதங்களாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரசைச் சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் உள்ளனர். கூட்டணி ஆட்சி என்பதால், இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை எதிர்பார்ப்பதால், முதல்-மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்தே குமாரசாமி நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.

அதே சமயம் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் கூட்டணி அரசை கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்ற அவ்வப்போது வியூகங்களை வகுத்து வருகிறது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபையில் ஆளும் காங்கிரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 79 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 பேர் என 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரிப்பதால் அரசுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கூட்டணி அரசில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ. எச்.நாகேஷ் நேற்று திடீரென்று கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்ததோடு, அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறுவதாக கூறினார்.

அவர் பதவி விலகிய சில மணி நேரத்தில் மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.யும், நகராட்சி நிர்வாக மந்திரியுமான ஆர்.சங்கரும் கவர்னரை சந்தித்து, தானும் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு தனது ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டனர்.

பதவி விலகிய எச்.நாகேசும், ஆர்.சங்கரும் பின்னர் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையே நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது, அரசை காப்பாற்றுவதற்காக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுத்து சரிக்கட்டுவது என்றும், அதற்கு வசதியாக மந்திரிசபையை மாற்றி அமைக்கும் வகையில் மந்திரிகள் அனைவரும் கூண்டோடு பதவி விலகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி காங்கிரஸ் மந்திரிகள் 21 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சித்தராமையாவிடம் கொடுத்தனர்.

இதேபோல் ஜனதாதளம் (எஸ்) மந்திரிகள் 9 பேரும் முதல்-மந்திரி குமாரசாமியிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.

பின்னர் குமாரசாமி நிருபர்களிடம் பேசுகையில், மந்திரிகள் ராஜினாமா செய்து இருப்பதால், மந்திரிசபை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் பேசுகையில், குமாரசாமி அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா 6 தடவையாக முயற்சிப்பதாகவும், என்றாலும் அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதே குற்றச்சாட்டை கூறிய சித்தராமையா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவின் ஆசை வார்த்தையில் மயங்கி விடக்கூடாது என்றும், காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் கூட்டணி மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மந்திரி பதவி கொடுக்க முடியாது என்றும், தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே மும்பை ஓட்டலில் தங்கி இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து நேற்று மாலை கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் மும்பை பாரதீய ஜனதா இளைஞர் அணி தலைவர் மொகித் பாரதியாவும் சென்றார்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யாமல் இருக்கும் வகையில், அவர் களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அக்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். தங்கள் எம்.எல்.ஏ.க்களை பெங்க ளூருவை அடுத்த தேவன ஹள்ளியில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைத்து இருக்கிறார்கள்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.
இதனால் கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

சபாநாயகரின் முடிவு என்ன?

இதற்கிடையே, 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை 9-ந் தேதி (அதாவது இன்று) பரிசீலிப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

2 சுயேச்சைகளின் ஆதரவை அரசு இழந்துவிட்ட நிலையில், 14 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் ஆளும் கூட்டணி அரசின் பலம் 103 ஆக குறைந்துவிடும். அதேசமயம் 2 சுயேச்சைகள் ஆதரவு தெரிவிப்பதால் பாரதீய ஜனதாவின் பலம் 107 ஆக உயர்ந்துவிடும்.

எனவே 14 எம்.எல்.ஏ.க் களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பாரா? அல்லது ஏற்க மறுத்துவிடுவாரா? என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் முடிவை பொறுத்தே, குமாரசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தீருமா? அல்லது அரசு கவிழுமா? என்பது தெரியவரும்.

Next Story