காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியில் தமிழகத்திற்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை என்று கூறி மாநில அரசு தண்ணீரை திறக்க மறுத்துவிட்டது.
இப்போது காவிரி உற்பத்தியாகும் குடகு மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தண்ணீர் திறக்கப்படும்
மண்டியா விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் நோக்கத்திலும், தமிழகம் பயன்பெறும் வகையிலும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொள்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு மத்தியில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை குமாரசாமி பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடத்தினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story