கர்நாடகா பிரச்சினை மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. வெளிநடப்பு மாநிலங்களவை ஸ்தம்பித்தது


கர்நாடகா பிரச்சினை மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. வெளிநடப்பு மாநிலங்களவை ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 10 July 2019 3:00 AM IST (Updated: 10 July 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பிரச்சினையால், மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இப்பிரச்சினையால் மாநிலங்களவையும் ஸ்தம்பித்தது.

புதுடெல்லி, 

கர்நாடக பிரச்சினையால், மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இப்பிரச்சினையால் மாநிலங்களவையும் ஸ்தம்பித்தது.

நகராட்சியாக மாற்றாதீர்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கர்நாடக பிரச்சினையை 2-வது நாளாக எழுப்பினார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவருக்கு ஆதரவாக தி.மு.க., தேசிய மாநாட்டு கட்சி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். ஆனால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கர்நாடக பிரச்சினையை எழுப்ப சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

அதை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்கு சபாநாயகர், “சபையில் பிரச்சினை எழுப்ப உங்களுக்கு உரிமை இருக்கிறது. உலகம் உங்களை பார்த்து கொண்டிருப்பதால், சபையின் கண்ணியத்தை காப்பது உங்கள் கடமை. மக்களவையை நகராட்சி போல மாற்றி விடாதீர்கள்” என்று கூறினார்.

வெளிநடப்பு

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, “ஒரே பிரச்சினையை ஒரே கூட்டத்தொடரில் 2-வது தடவையாக எழுப்ப முடியாது” என்று கூறினார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை தவறாக பயன்படுத்துவதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இதையடுத்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், தி.மு.க. உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவை

மாநிலங்களவையிலும், நேற்று கர்நாடக பிரச்சினை எதிரொலித்தது. சபை கூடியவுடன், கர்நாடக பிரச்சினை குறித்து விவாதிக்க காங்கிரசும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கம் குறித்து திரிணாமுல் காங்கிரசும் அளித்த நோட்டீசுகள் நிராகரிக்கப்பட்டதாக சபைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

உடனே, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபையின் மையப்பகுதிக்கு ஓடிச்சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். இதனால், சபையை பகல் 12 மணிவரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பகல் 12 மணிக்கு சபை கூடிய போது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதேபோன்று கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபையை பிற்பகல் 2 மணி வரை சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

2 மணிக்கு சபை கூடியபோது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருக்கைகளுக்கு செல்லுமாறு அவர்களை ஹரிவன்ஷ் அறிவுறுத்தினார்.

ஆனால் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து அமளி நீடித்ததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், எந்த அலுவலும் கவனிக்க முடியாமல் மாநிலங்களவை ஸ்தம்பித்தது.

அரசை சீர்குலைக்க முயற்சி

இதற்கிடையே, கர்நாடகாவை சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா உள்ளிட்டோர் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

கர்நாடக அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயன்று வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் உத்தரவின் பேரில், எடியூரப்பாவின் உதவியாளரும், மத்திய மந்திரி பியூஸ் கோயலும் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டில் 6-வது தடவையாக இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும் வரை, மாநிலங்களவையில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story