ஒரே நாளில் நாடு முழுவதும் 19 மாநிலங்களில் மதுரை உள்பட 110 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை சிக்கியது என்ன?


ஒரே நாளில் நாடு முழுவதும் 19 மாநிலங்களில் மதுரை உள்பட 110 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை சிக்கியது என்ன?
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 9:13 PM GMT)

நாடு முழுவதும் ஒரே நாளில் 19 மாநிலங்களில் 110 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி சி.பி.ஐ. அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் ஒரே நாளில் 19 மாநிலங்களில் 110 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி சி.பி.ஐ. அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.ஐ. அதிரடி

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வங்கிகளில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான 61 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை 17 வழக்குகள் தொடர்பானவை. இவற்றை 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்தினர்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த சோதனைகள் ரூ.1,139 கோடி மோசடியையொட்டி நடந்தன. இந்த சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

மீண்டும் அதிரடி சோதனை

இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 19 மாநிலங்களில், 110 இடங்களில் அவர்கள் இந்த சோதனைகளை நடத்தினர்.

மதுரை, டெல்லி, மும்பை, சண்டிகார், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஐதராபாத், கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் போன்ற இடங்கள் சோதனை நடந்த 110 இடங்களில் அடங்கும்.

சிக்கியது என்ன?

மேலும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாசலபிரதேசம், பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்கள் சி.பி.ஐ. சோதனைக்கு ஆளான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த சோதனைகள், லஞ்ச ஊழல், ஆயுதங்கள் கடத்தல், குற்றவியல் தவறான நடத்தை, வெடிபொருட்கள் பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக நடைபெற்றன.

இந்த சோதனைகளின்போது சிக்கியது என்ன என்பது அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ரொக்கப்பணம், ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

2-ந் தேதி, 9-ந் தேதி என தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story