அணை கட்ட அனுமதிப்பதா? வேண்டாமா? மேகதாது அணை திட்டத்தை இறுதி செய்ய டெல்லியில் ஆலோசனை சுற்றுச்சூழல் அமைச்சகம் 19–ந் தேதி நடத்துகிறது


அணை கட்ட அனுமதிப்பதா? வேண்டாமா? மேகதாது அணை திட்டத்தை இறுதி செய்ய டெல்லியில் ஆலோசனை சுற்றுச்சூழல் அமைச்சகம் 19–ந் தேதி நடத்துகிறது
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வருகிற 19–ந் தேதி டெல்லியில் நடைபெறும் சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

புதுடெல்லி, 

மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வருகிற 19–ந் தேதி டெல்லியில் நடைபெறும் சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

மேகதாது அணை திட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் குடிநீர் மற்றும் நீர் மின்சார தேவைக்காக புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனம் ஆகும் என்று தமிழக விவசாயிகள் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அரசும், அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்தன. மத்திய அரசிடமும் பல்வேறு கட்டங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதமும் எழுதினார். பிரதமருக்கும் தனியாக கடிதம் எழுதினார். ஆனாலும் கர்நாடக அரசு தனது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. எப்படியும் அணையை கட்டிவிடலாம் என்ற நிலைப்பாட்டிலேயே முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

இறுதி செய்ய ஆலோசனை

இந்த நிலையில் மேகதாது திட்டத்தை அனுமதிக்கக்கோரி கர்நாடக அரசின் காவிரி நீராவரி நிகாமா நியமிதா என்ற அமைப்பு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு கடந்த மாதம் ஒரு கடிதம் எழுதியது.

அந்த கடிதத்தில், அணை கட்டப்பட உள்ள இடத்தில் வனப்பகுதியும் வருகிறது என்பதை சுட்டிக்காட்டி, திட்டத்துக்கு அனுமதி கோரப்பட்டு இருந்தது. அத்துடன் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, ஆவணங்கள் மற்றும் வரைபடங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த கடிதத்தின் அடிப்படையில், மேகதாது திட்டத்தை இறுதி செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 19–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர். அந்த அணையை கட்டுவதற்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி நிபுணர் குழுவினர் அந்த கூட்டத்திலேயே இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல அன்றைய தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நீர்மின் திட்டங்கள் மற்றும் அணை கட்டுமானங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஆலோசனை நடத்துகிறது.


Next Story